டிடிவி தினகரன் 
செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் 5-ந்தேதி டி.டி.வி.தினகரன் அஞ்சலி

சென்னை மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

மாலை மலர்

சென்னை:

அ.ம.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக மக்களின் மனங்களில் எல்லாம் நிறைந்து வாழும் தங்கத்தாரகை, தமிழக மக்களின் நலன்களை காத்து நின்ற தனிப்பெரும் ஆளுமை, துணிவும், தெளிவும் நிறைந்த கம்பீரத் தாய் ஜெயலலிதாவை போற்றி வணங்கும் வகையில், அவருடைய நினைவு நாளான வருகிற 5-ந்தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஒவ்வொரு ஊர்களிலும் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்திடுவோம். தமிழகத்தின் நலன்களை காத்திட ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் நாம் ஏற்படுத்திட மனதார உறுதியேற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.