ஆதிகேசவ பெருமாள் கோவிலில் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் விசாரணை நடத்திய போது எடுத்த படம். 
செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே கோவில் பூட்டை உடைத்து சிலைகளை திருட முயற்சி

உளுந்தூர்பேட்டை அருகே பழமையான கோவிலில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து சிலைகளை திருட முயன்ற சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.மாம்பாக்கம் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. நேற்று காலை இந்த கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு இருக்கும் சம்பவத்தை கேள்விப்பட்டு பொதுமக்கள் அங்கே திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் கோவில் கதவின் பூட்டை உடைத்து சிலைகளை திருட முயற்சி செய்து இருக்கலாம் எனவும், அப்போது அந்த வழியாக பொதுமக்கள் யாராவது வந்து இருக்கலாம் என்றும், அவர்களை கண்ட மர்ம நபர்கள் தப்பி ஓடி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கோவில்களில் சிலை திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மர்மநபர்கள் சிலைகளை திருட முயற்சி செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கோவில் மற்றும் வணிகவளாகங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம நபர்கள் சிக்கி இருக்கிறார்களா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT