குனியமுத்தூர்:
டீசல், பெட்ரோல் விலை உயர்வு காரணமாக, லாரி வாடகையை, 20 சதவீதம் உயர்த்தியுள்ளதாக, கோவை லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, சங்கத்தின் தலைவர் முருகேசன் கூறியதாவது:-
உலக நாடுகளில் கச்சா எண்ணை சந்தை விலைக்கேற்றவாறு, முந்தைய மத்திய அரசு மாதம் இருமுறை, டீசல், பெட்ரோல் விலையை ஏற்றியது. தற்போதைய அரசு விலையை உயர்த்துவது குறித்து, எண்ணை நிறுவனங்களுக்கு, தன்னாட்சி அதிகாரத்தை வழங்கி உள்ளது. கடந்த மே வரை ஊரடங்கு காரணமாக, பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாறுதல் இல்லை. ஜூன் மாதத்தில் விலை உயர்த்தப்பட்டது. தற்போது பெட்ரோல் விலை 90 ரூபாயாகவும், டீசல் விலை 83 ஆகவும் உயர்ந்துள்ளது.
டீசல் விலை உயர்வால், வேறு வழியின்றி சரக்கு போக்குவரத்து கட்டணம், 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தியாகும் பெட்ரோலிய பொருட்களை, உள்நாட்டு தேவை போக, ஏற்றுமதி செய்து பெட்ரோலிய பொருட்களை, ஜி.எஸ்.டி.,வரம்பிற்குள் கொண்டு வந்தால், விலை கட்டுக்குள் இருக்கும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
லாரி வாடகை உயர்வால், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.