ஆவடி:
ஆவடியை அடுத்த பட்டாபிராம் போலீஸ் நிலையம் எதிரே சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். முழு உருவ சிலை நிறுவப்பட்டது. தற்போது அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சிலை அருகே பஸ், லாரிகள், கார் உள்ளிட்டவை திரும்பும் வளைவாக அப்பகுதி உள்ளது.
இந்த நிலையில், நேற்று காலை 8 மணியளவில் திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் இரும்பு கம்பெனியில் இருந்து ஆவடியில் உள்ள தனியார் கம்பெனிக்கு கொண்டு செல்வதற்காக இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு டிரைலர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
நெமிலிச்சேரி மேம்பாலம் வழியாக தண்டரை வந்து எம்.ஜி.ஆர். சிலை அருகே லாரி திரும்பும்போது எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆர்.சிலையின் மீது மோதியது. இதில் சிலையின் இடது கை சேதமடைந்து கீழே விழுந்து நொறுங்கியது.
இதையடுத்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் தென்காசி மாவட்டம் செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான சாமிதாஸ் (வயது 46) என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து பட்டாபிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து புதிய சிலையை மாற்றி தருகிறோம் என லாரி உரிமையாளர்கள் கூறியதையடுத்து, அங்கிருந்து கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து போலீசார் சிலையை துணியால் சுற்றி மூடி வைத்தனர்.