பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள அரசு பேருந்துகள் 
செய்திகள்

அரசு பஸ் ஸ்டிரைக் 3-வது நாளாக நீடிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த தொழிலாளர் நல ஆணையம்

தமிழகம் முழுவதும் இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நல ஆணையம் அழைத்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு உடனடி ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று 3-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் வழக்கத்தை விட குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பல மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நல ஆணையம் அழைத்துள்ளது.

தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மாலை 3 மணிக்கு போக்குவரத்து தொழிலாளர்களுடன் தொழிலாளர் நல ஆணையம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.