கோப்புப்படம் 
செய்திகள்

திருப்பூர் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்

திருப்பூர் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர்- சோமனூர் இடையே வஞ்சிபாளையம் ரெயில்வே ஸ்டே‌ஷன் உள்ளது.

இந்த பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தண்டவாளத்தில் லேசான விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து திருப்பூர் மற்றும் சூலூர் ரெயில் நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக தொழில்நுட்ப குழுவினர் விரைந்து வந்து விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

விரிசல் காரணமாக கோவை நோக்கி சென்ற மங்களூர் எக்ஸ்பிரஸ் மற்றும் திருப்பூர் வந்த நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஆகியவை ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. சுமார் அரை மணி நேரத்தில் அந்த விரிசல்கள் சரி செய்யப்பட்ட பின்னர் ரெயில்கள் விடப்பட்டன.

இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் கூறுகையில், சரியான நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர் என்றனர்.