விபத்து 
செய்திகள்

பள்ளம் கடற்கரையில் டிராக்டர் மோதி பெண் பலி

பள்ளம் கடற்கரையில் டிராக்டர் மோதி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

மேலகிருஷ்ணன்புதூர்:

மேலகிருஷ்ணன் புதூர் அருகே உள்ள பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வர்க்கீஸ் மனைவி செலின்மேரி (வயது 67). இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார்.

இவர் நேற்று வழக்கம்போல் காலை 8 மணிக்கு மீன் ஏலம் எடுக்க பள்ளம் கடற்கரைக்கு சென்றார் அங்கு கரையோரத்தில் செலின்மேரி காத்து இருந்தார்.

அப்போது கடலில் நின்ற வள்ளத்தை டிராக்டர் மூலம் கரைக்கு கொண்டு வர டிரைவர் பிரவீன் போஸ் (20) முயன்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் பின்னால் இருந்த செலின்மேரி மீது மோதியது. இதனால் கீழே விழுந்த அவர் தலையில் டிராக்டரின் டயர் ஏறியதில் செலின்மேரி சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார்.

இதுபற்றி செலின்மேரி மகன் மார்கோஸ் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செலின்மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் பிரவீன் போஸ் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். பள்ளம் கடற்கரையில் டிராக்டர் மோதி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.