ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் டி.சிம்ரன், ஹாசினி, நிக்கிசா, அமிர்தா, தனு ஆகியோர் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
எங்களிடம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை உள்ளது. நாங்கள்இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பல முறை விண்ணப்பித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால் தகுதி இல்லாத சிலருக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டு உள்ளது. அப்படி வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். திருநங்கைகளாக இல்லாத சிலர் போலி அடையாள அட்டை வைத்துக்கொண்டு சுற்றி வருகிறார்கள். அவர்களை அதிகாரிகள் கண்டறிந்து விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
இதேபோல் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கொடுத்திருந்த மனுவில், ‘நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பரப்புரையாளர்களாக உள்ளோம். சுகாதார கணக்கெடுப்பு, தனிநபர் கழிப்பிடம் அமைப்பது, கொரோனா தடுப்பு பணிகள், டெங்கு ஒழிப்பு பணி மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். தற்போது புதிதாக டெண்டர் எடுத்த ஒரு தனியார் நிறுவனம் எங்களுக்கு அரசு நிர்ணயம் செய்த ரூ.14 ஆயிரத்து 259-க்கு பதிலாக ரூ.6 ஆயிரத்து 500 மட்டுமே கொடுக்கிறார்கள். எனவே எங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு நிர்ணயித்து உள்ள தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.