அனுப்பர்பாளையம்:
திருப்பூர் சாமுண்டிபுரத்தை அடுத்த அன்னலட்சுமி வீதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவருடைய மனைவி ஜெயசித்ரா (வயது 25). சம்பவத்தன்று இரவு காளிதாஸ்
மனைவியுடன் மோட்டார்சைக்கிளில் வலையங்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென
தம்பதியை கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் ஜெயசித்ராவின் கழுத்தில் கிடந்த 4¾ பவுன் சங்கிலியை பறித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் திருடன் திருடன் என்று கூச்சல் போட்டுள்ளனர். அப்போது சங்கிலியை பறித்த 2 பேரில் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து
வந்த ஆசாமி கீழே விழுந்து விட்டார். ஆனால் மோட்டார்சைக்கிளை ஓட்டிய ஆசாமி பயந்துபோய் கீழே விழுந்த ஆசாமியை கண்டுகொள்ளாமல், அங்கேயே விட்டு
விட்டு தப்பி சென்றார்.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்து கீழே விழுந்து கிடந்த ஆசாமியை பிடித்து 15 வேலம்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போயம்பாளையம் கங்காநகர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாலகிருஷ்ணனுடன் மோட்டார்சைக்கிளில் வந்த நபர் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர் கங்காநகர் பகுதியை சேர்ந்த ஷாஜகான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஷாஜகானையும் போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் ஏற்கனவே திருப்பூர் வடக்கு மற்றும் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.