திருவாரூர் அருகே ஆத்தூரில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம். 
செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான 25 ஆயிரம் எக்டேர் நெற்பயிர்கள் சாய்ந்தன

திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த 25 ஆயிரம் எக்டேர் நெற்பயிர்கள் நீரில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மாலை மலர்

திருவாரூர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஒடியது. அனைத்து பணிகள் முடங்கியதால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது.

திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 476 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 15 நாட்கள் பெய்த கன மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு வயல்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் 90 ஆயிரம் எக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியது.

முதல்-அமைச்சர் அறிவிப்பின் படி நிவாரணம் வழங்குவதற்கான பயிர் பாதிப்பு குறித்து உரிய கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்தது. இதனையடுத்து எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் சம்பா, தாளடி சாகுபடி செய்த வயல்களில் மீண்டும் மழை நீர் தேங்கி நிற்கிறது.

இதனால் மாவட்ட அளவில் அறுவடைக்கு தயாராக உள்ள 25 ஆயிரம் எக்டேர் நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்துள்ளன. பல இடங்களில் தண்ணீரிலும் மூழ்கியதால் நெல் மணிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் சாய்ந்த பயிர்கள் முளைக்க தொடங்கியது.

இதனால் அதிக மகசூல் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. முன்பு பெய்த மழையால் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு இறுதி செய்யப்பட்டு நிவாரணம் வழங்கும் நிலையில், மீண்டும் பெய்து வரும் மழையினால் பயிர்கள் பாதிப்பு அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.