கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியை கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆய்வு செய்த போது எடுத்தபடம். 
செய்திகள்

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - திருவண்ணாமலை கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார்.

மாலை மலர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட வேட்டவலம் சாலை சிமெண்டுகார தெருவில் நேற்று சுகாதாரத் துறை சார்பில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து திருவண்ணாமலை நகர பகுதியில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் சமூக இடைவெளியின்றி ஏராளமான மக்கள் நிற்பதை கண்ட கலெக்டர் கடைக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் இருந்ததை தொடர்ந்து உடனடியாக அக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் மாட வீதியில் உள்ள ஒரு ஓட்டலிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் அந்த ஓட்டலுக்கும் நேரில் சென்று எச்சரிக்கை விடுத்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். அதேபோன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஒரு நகைக்கடைக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து திருவூடல் தெருவில் உள்ள ஒரு நகை கடையில் கூட்டம் அதிகம் இருப்பதை கண்ட கலெக்டர் அந்த கடைக்கு சென்று பார்வையிட்டு, கடை உரிமையாளரை அழைத்து அரசு உத்தரவுகளை பின்பற்ற மாட்டீர்களா என்று எச்சரிக்கை விடுத்தார். ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும் நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதற்கு நகராட்சி அலுவலர்கள் கடந்த வாரம் இந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்று தெரிவித்தனர். தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று கடை உரிமையாருக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து அந்த கடையின் மேல்தளத்தில் உள்ள தங்க நகை விற்பனை பிரிவுக்கு சென்று பார்த்தார். அங்கும் ஏராளமானோர் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். பின்னர் கடையில் தேவையின்றி நின்றவர்கள் அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டார். கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர் திருமஞ்சன கோபுர வீதியில் நடைபெற்ற காய்ச்சல் சிறப்பு முகாமை பார்வையிட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களுக்கும் கொேரானா பரிசோதனை மேற்கொள்ள முகாம் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சைக்காக தற்போது 1,500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. இதில் 30 சதவீதம் படுக்கைகள் நிரப்பப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், படுக்கைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மேலும் மாவட்டத்தில் காய்ச்சல் சிறப்பு முகாம்களை அதிகப்படுத்துவதற்காக 54 நடமாடும் மருத்துவ குழு பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி 99 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 73 மினி கிளினிக் டாக்டர்களையும் அந்தந்த பகுதியில் உள்ள கொேரானா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

கடந்த ஒரு வாரமாக தினமும் சுமார் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பாிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் முககவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது போன்ற கொரோனா வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்க சுகாதாரத் துறை, வருவாய்த் துைற, நகராட்சி மற்றும் போலீசார் மூலம் 25 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு நாளுக்கு சுமார் ரூ.2 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2 முறை அபராதம் விதிக்கப்பட்டும் கொரோனா வழிமுறையை பின்பற்றாத கடைக்கு சீல் வைக்கப்படும்.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 2,000 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தேவையான அளவு கொரோனா தடுப்பூசி இருப்பு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.