கோப்புபடம் 
செய்திகள்

திருமங்கலம் அருகே விபத்து - ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியானது எப்படி? உருக்கமான தகவல்கள்

திருமங்கலம் அருகே நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாலை மலர்

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் சவுகத் அலி தெருவைச் சேர்ந்தவர் பழ வியாபாரி அபுபக்கர் சித்திக் (வயது55). இவர் மேலப்பள்ளிவாசல் ஜமாத் செயலாளராக உள்ளார்.

இவரது மகள் நஸ்ரின் பாத்திமா பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். குழந்தை பிறந்து 7 மாதமான நிலையில் சிவகாசியில் உள்ள அவரது கணவர் வீட்டில் கொண்டு சென்று விடுவதற்காக அபுபக்கர் சித்திக் குடும்பத்துடன் ஆம்னி காரில் புறப்பட்டு சென்றனர்.

அவருடன் மனைவி சகர்பானு, மகள்கள் நஸ்ரின்பாத்திமா, ஷிபா, மகன் சாகுல் அமீது, 7 மாத குழந்தை ஆகியோர் ஆம்னி காரில் பயணம் செய்தனர். காரை சாகுல் அமீது ஓட்டி வந்தார்.

திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி அருகே கே.வெள்ளாகுளம் விலக்கு பகுதியில் கார் வந்த கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக விருதுநகரிலிருந்து பெங்களூர் எதிர்புறமாக நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் தறிகெட்டு ஓடிய அந்த கார் கள்ளிக்குடி நான்குவழிச் சாலையின் தடுப்புச் சுவரை தாண்டி மற்றொரு சாலையில் எதிர்த்திசையில் அபுபக்கர் சித்திக்கின் குடும்பம் வந்து கொண்டிருந்த ஆம்னி கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் 2 கார்களும் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் ஆம்னி காரில் பயணம் செய்த அபுபக்கர் சித்திக், மனைவி சகர்பானு, மகள்கள் நஷ்ரின்பாத்திமா, ஷிபா, மகன் சாகுல்ஹமீது, ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில் 7 மாத கைக்குழந்தை மற்றும் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த பெங்களூர் விராட் நகரை சேர்ந்த கவுதம் (27) ஆகியோர் படுகாயமடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பிவைக்கப்பட்டனர்

2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவத்தால் திருமங்கலம் சவுகத்அலி தெரு சோக மயமானது. இந்த கோர விபத்தில் 7 மாத கைக்குழந்தை மட்டும் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், திருமங்கலம் டி எஸ்பி வினோதினியிடம் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.

விபத்தில் இறந்த அபுபக்கர் சித்திக் பற்றி உருக்கமான தகவல் கிடைத்துள்ளது. இவர் திருமங்கலத்தில் பழக்கடை நடத்தி வந்தார். தந்தைக்கு உதவியாக மகன் சாகுல் அமீதும் வியாபாரத்தை கவனித்து வந்தார்.

அபுபக்கர் சித்திக்கிற்கு செரீன்பானு, ஜொனோபர், நஸ்ரின் பாத்திமா, ஷிபா ஆகிய 4 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் செரின் பானு திருமணமான நிலையில் 2-வது மகள் ஜெனோபர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

3-வது மகள் நஸ்ரின் பாத்திமாவை சிவகாசியில் திருமணம் செய்து கொடுத்தார். இளைய மகள் ஷிபா (18) கல்லூரியில் படித்து வந்தார்.

ஜெனோபர் உயிரிழந்ததை தொடர்ந்து நேற்று நடந்த விபத்தில் நஸ்ரின் பாத்திமா, ஷிபா ஆகியோரும் இறந்தனர். மூத்த மகள் செரீன்பானுவை பெற்றோர் சிவகாசிக்கு தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் கடைசி நேரத்தில் அவர் செல்லவில்லை. இதனால் செரீன்பானு உயிர் தப்பினார்.

2-வது மகள் டெங்குவால் இறந்த நிலையில், மற்ற 2 மகள்களுடன் விபத்தில் சிக்கி அபுபக்கர் சித்திக் மற்றும் அவரது மனைவி சகர்பானு, மகன் சாகுல் அமீது இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.