கோப்புபடம் 
செய்திகள்

தஞ்சை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பலி - 14 பேர் படுகாயம்

தஞ்சை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பலியானார். இந்த விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

வல்லம்:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள சேவியர் குடிகாடு பகுதியை சேர்ந்தவர் ஒருவரின் திருமண நிகழ்ச்சி தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேவியர்குடிகாடு பகுதியை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என சுமார் 15 பேர் சரக்கு ஆட்டோ மூலமாக வந்திருந்தனர்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சரக்கு ஆட்டோவில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அப்போது கறம்பக்குடி மருங்குளம் சாலையில் சென்றபோது திடீரென பின் டயர் வெடித்துள்ளது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

இதில் சரக்கு ஆட்டோவில் வந்த 15 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சேவியர்குடிகாடு பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மனைவி தனபாக்கியம் (வயது 70) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 14 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து வல்லம் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT