ஜவுளிக்கடையில் தீ பற்றி எரிவதை படத்தில் காணலாம். 
செய்திகள்

சுரண்டையில் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து- பலகோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

சுரண்டையில் இன்று அதிகாலை ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசமானதாக கூறப்படுகிறது.

மாலை மலர்

சுரண்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சுரண்டை அண்ணாசிலை அருகே ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

மொத்தம் 3 தளங்களுடன் கூடிய இந்த ஜவுளிக்கடை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. நேற்று இரவு கடை ஊழியர்கள் வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு வீடு திரும்பினர். இன்று அதிகாலை 2 மணி அளவில் கடையின் தரை தளத்தில் திடீரென தீப்பிடித்தது.

மக்கள் நடமாட்டம் இல்லாததால் தீ பற்றி எரிந்தது. மேலும் இன்று முழு ஊரடங்கையொட்டி கடையில் இருந்த காவலர்களும் நேற்று இரவே வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் கடையில் தீ எரிவதை பார்த்து சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ மளமளவென்று 3 தளங்களுக்கும் பரவியது. இதனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர் தீயணைப்பு துறையினரும் வரவழைக்கப்பட்டனர்.

5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இன்று காலை 8 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனாலும் 3 தளங்களிலும் இருந்த ஆடைகள் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது. இந்த பயங்கர தீ விபத்தால் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசமானதாக கூறப்படுகிறது.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.