தென்காசி:
தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களில் பலர் பல்வேறு கோரிக்கைகளை காணொலி காட்சி வாயிலாக தெரிவித்தனர். அந்த கோரிக்கைகளுக்கு கலெக்டர் பதிலளித்தார். மேலும் பல்வேறு கோரிக்கைகளுக்கு உரிய அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மாற்றுத்திறனாளிகள் சிலர் கோரிக்கை மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் மூன்று சக்கர சைக்கிளில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்தனர். இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக கலெக்டர் சமீரன் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதற்கிடையே செங்கோட்டை தாலுகா தேன்பொத்தை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
எங்களது கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் இறந்தவர்களை புதைப்பதற்கு பெரிய பிள்ளை வலசை கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 5 தலைமுறையாக ஒரு நிலத்தை தொடர்ந்து மயானமாக பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த அரசு அலுவலர் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த மயானத்தை சேதப்படுத்தினர். இதைக் கேள்விப்பட்ட நாங்கள் அனைவரும் சேர்ந்து தடுத்தோம். இதுகுறித்து செங்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர் அந்த இடத்திற்கு புதிதாக பத்திரம் உருவாக்கியதை காட்டினார். இதைத்தொடர்ந்து போலீசார் நீதிமன்றம் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளவும் என்று கூறிவிட்டனர்.
பின்னர் இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்தோம். ஆனால் மீண்டும் அந்த அரசு அலுவலர் அந்த மயானத்தில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் போலீசில் கூறியதால் அந்த பணி நிறுத்தப்பட்டது. அவர் தொடர்ந்து எங்களை மிரட்டி வருகிறார். மேலும் இறந்த முன்னோர்களின் புதைகுழி மற்றும் சமாதிகளை சேதப்படுத்தியது எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடையநல்லூர் தாலுகா அச்சம்பட்டி, பொய்கை, இடைகால் ஆகிய பகுதிகளை சேர்ந்த இந்து தொழுவ நாயக்கர் சமுதாய கூட்டமைப்பு சார்பில் முத்துக்குமாரசாமி, ராஜாஜி ஆகியோர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில், “எங்கள் சாதி ஆரம்பத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்து வந்தது. கடந்த 1990-ம் ஆண்டு முதல் தமிழக அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இணைத்த நாள் முதல் நாங்கள் சுமார் 35 வருடங்களுக்கு மேலாக இன்று வரை தொழுவ நாயக்கர் சாதி சான்றிதழ் பெற்று வருகிறோம். இந்தநிலையில் கடந்த 2 வருடங்களாக சாதிச்சான்றிதழ் சிலருக்கு வழங்கியும், வழங்காமலும் கடையநல்லூர் வருவாய்க்கு உட்பட்ட அதிகாரிகள் எங்கள் சமுதாய மக்களை அலைக்கழித்து வருகின்றனர். எங்கள் குழந்தைகள் கல்வி, வேலைவாய்ப்புக்கு பாதிப்பு ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை. எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து சாதிச்சான்றிதழை வழங்க கேட்டுக் கொள்கிறோம்“ என்று கூறப்பட்டுள்ளது.
விசுவ இந்து பரிஷத் சார்பில் மாவட்ட செயலாளர் அமல சித்திரக்கண்ணன் கொடுத்த மனுவில், “பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் அடிவாரத்தில் கடந்த 27-11-2020 அன்று எங்களது மாநில தலைவரால் விசுவ இந்து பரிஷத் கொடிக்கம்பம் வைக்கப்பட்டது. அதனை இரவோடு இரவாக போலீசார் எவ்வித முன் அனுமதி இன்றி எடுத்துச் சென்றுவிட்டனர். மற்ற கட்சியினர் கொடிக்கம்பங்கள் இருக்கும் நிலையில் எங்களது கொடிக்கம்பம் மட்டும் அகற்றப்பட்டு இருப்பதை கண்டிக்கிறோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி விசுவ இந்து பரிஷத்தை சேர்ந்த சிலர் ஆதார் கார்டுகளை ஒப்படைப்பதாக கூறி வந்தனர். அப்போது அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா, இந்து முன்னணியினர் பலர் கலந்து கொண்டனர்.