ஓமலூர்:
ஓமலூர் அருகே ஊமகவுண்டம்பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் திருவிழா நடைபெறும். மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும்.
மேலும் திருவிழாவிற்கு முன்பாக உண்டியலை திறந்து எண்ணி, அதில் கிடைக்கும் தொகையை கோவில் கணக்கில் சேர்ப்பது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்கு காலையில் பூசாரி கந்தசாமி மற்றும் பக்தர்கள் வந்தனர். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர்.
அதில் 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.