கொலை 
செய்திகள்

முக்கூடல் அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல்- வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

முக்கூடல் அருகே முப்பிடாதி அம்மன் கோவிலில் சூறைத்திருவிழா நடந்தது. அப்போது ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடியை அடுத்த நத்தம் காலனியில் நேற்று முப்பிடாதி அம்மன் கோவில் சூறைத்திருவிழா நடந்தது.

இந்த விழாவை காண நத்தம் காலனியை சேர்ந்த நண்பர்களான இசக்கிராஜா (21), ஆனந்தராஜா (17), சங்கரநாராயணன் (25) ஆகியோர் சென்றனர். அப்போது அவர்கள் குடிபோதையில் கோவில் விழாவில் ரகளை செய்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த ஊர்த்தலைவர் பாபநாசம் (60) அங்கு சென்று வாலிபர்களை கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இசக்கிராஜா தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து பாபநாசத்தை சரமாரியாக வெட்டினார். அருகில் நின்ற பாபநாசத்தின் உறவினர்கள் மாரீசன், அவரது மகன் ஜெய்கணேஷ் (22) ஆகியோர் ஓடி வந்து இசக்கிராஜாவை தடுத்தனர். அப்போது இசக்கிராஜா, ஜெய்கணேசையும் அரிவாளால் வெட்டினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெய்கணேசும், அவரது தந்தை மாரீசனும் சேர்ந்து இசக்கிராஜா கையில் இருந்த அரிவாளை பறித்து, அவரை வெட்டினார். இதில் இசக்கிராஜாவும் பலத்த காயம் அடைந்தார்.

கோவில் விழாவில் நடந்த மோதலில் 3 பேர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியதில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அவர்களது உறவினர்கள் படுகாயம் அடைந்த இசக்கிராஜா, பாபநாசம் மற்றும் ஜெய்கணேஷ் ஆகிய 3 பேரையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை இசக்கிராஜா பரிதாபமாக இறந்தார்.

பலத்த காயம் அடைந்த பாபநாசம் உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கையில் காயம் அடைந்த ஜெய்கணேஷ்சுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக அம்பை டி.எஸ்.பி. பிரான்சிஸ், பாப்பாக்குடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த பிரச்சினை தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்தும் விசாரணை நடந்து வருகிறது. அந்த பகுதியில் மேலும் அசம்பாவிதம் நடைபெறாதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.