பணம் பறிமுதல் 
செய்திகள்

தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை:

கோவை மாவட்டம் தமிழக-கேரள எல்லையான க.க.சாவடி சோதனை சாவடி வழியாக கனரக வாகனங்கள் உள்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் வந்து செல்கின்றன.

இந்தநிலையில் க.க.சாவடியில் உள்ள வட்டார போக்குவரத்து சோதனை சாவடியில் வாகன ஓட்டிகளிடம் அதிகாரிகள் லஞ்சம் வாக்குவதாக புகார் வந்தது.

இதனையடுத்து லட்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் இன்று காலை 6 மணியளவில் சோதனை சாவடிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அங்கு இருந்து கணக்கில் வராத ரூ.87 ஆயிரம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சரோஜா, உதவியாளர் அருண்குமார் ஆகியோரிடம் கணக்கில் வராத பணம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தமிழக- கேரள எல்லையில் உள்ள கோபாலபுரத்தில் வட்டார போக்குவரத்து சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது.

இந்த சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 5 மணியளவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கு இருந்து கணக்கில் வராத ரூ.50,200 ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சோதனை சாவடியில் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார், உதவியாளர் ஸ்ரீகாந்த் ஆகியோரிடம் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.