புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக புஷ்பா கனேதிவாலா பணியாற்றி வருகிறார். சமீபத்தில் போக்சோ சட்டம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி புஷ்பா கனேதிவாலா, உடலோடு உடல் தீண்டாமல் ஆடையுடன் தீண்டுவது பாலியல் சீண்டல் ஆகாது என தீப்பளித்தார். இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது தீர்ப்பை பலரும் விமர்சனம் செய்தனர்.
இதை கவனத்தில் கொண்ட அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தலைமை நீதிபதி பாப்டேயிடம், அந்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக் கொண்டு, தலைமை நீதிபதி, இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தார்.
இதனிடையே கூடுதல் நீதிபதியாக இருக்கும் அவரை நிரந்தர நீதிபதியாக நியமிக்க கடந்த 20ம் தேதி உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், நீதிபதி புஷ்பா கனேதிவாலா சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்ததால் அவரை நிரந்தர நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலிஜியம் திரும்பப் பெற்றுள்ளது.