பிரியதர்ஷினி 
செய்திகள்

தனியார் மருத்துவமனையில் கை முறிவு ஆபரேஷனுக்கு சென்ற 3 வயது சிறுமி திடீர் மரணம்

அனுப்பர்பாளையம் அருகே தனியார் மருத்துவமனையில் கை முறிவு ஆபரேஷனுக்கு சென்ற 3 வயது சிறுமி திடீரென இறந்து போனார். தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மாலை மலர்

அனுப்பர்பாளையம்:

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது30). இவர் அங்குள்ள தனியார் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவியும், ஹரிணி (6), பிரியதர்ஷினி (3 ) என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் பிரியதர்ஷினி கீழே விழுந்து இடது கை முட்டியில் எலும்பு முறிந்து காயம் ஏற்பட்டதால், அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பிரியதர்ஷினியை கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சம்பவத்தன்று மாலை பிரியதர்ஷினிக்கு கையில் டாக்டர்கள் ஆபரேஷன் செய்தனர். அன்று இரவு 10.50 மணி அளவில் பிரியதர்ஷினி இறந்துவிட்டதாக திடீரென்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தவறான சிகிச்சையில் சிறுமி இறந்ததாக கூறி அந்த மருத்துவமனை முன்பு ராமகிருஷ்ணனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குவிந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமகிருஷ்ணன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சமரசப்படுத்தினர். பின்னர் பிரியதர்ஷினியின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கையில் ஏற்பட்ட காயத்திற்கு ஆபரேஷன் செய்த நிலையில் சிறுமி திடீரென்று உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.