பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆதி தெருவை சேர்ந்தவர் அருள். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் செல்வகணேஷ் (வயது17) 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று செல்வகணேஷ் தனது 2 நண்பர்களுடன் பட்டுக்கோட்டை அருகே முதல் சேரி கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள பூலாங்கண்ணி ஏரியில் செல்வகணேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் உள்பட 3 பேர் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது செல்வகணேஷ் ஏரியில் சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கினார். இதைக்கண்ட மற்ற 2 பேரும் நீந்தி கரைக்கு வந்து கூச்சல் போட்டனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆல்பன், அஜித் குமார், பாலசந்தர், பாபு ஆகியோர் ஏரியில் குதித்து செல்வகணேசை தேடினர்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சேற்றில் சிக்கி இறந்த நிலையில் மாணவர் செல்வகணேசின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி பட்டுக்கோட்டை தாலுகா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று மாணவர் செல்வகணேசின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.