சென்னை:
கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு
படிப்படியாக பயணிகள் ரெயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக பயணிகள் ரெயில் சேவை முழுமையாக தொடங்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இதற்கு
தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்து செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
முழுமையாக பயணிகள் ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு விட்டதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவல்கள் முற்றிலும் வதந்தி. பயணிகள்
ரெயில் சேவை முழுமையாக தொடங்கப்படுவது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ரெயில்வே நிர்வாகம் பயணிகள் ரெயில் சேவைகளின் எண்ணிக்கையைதான் அதிகரித்துள்ளது. ஏற்கனவே 65 சதவீதம் பயணிகள் ரெயில் சேவைகள் இயக்கப்பட்டுவிட்டது. மேலும் கூடுதலாக ஜனவரி மாதம் 250-க்கும் மேற்பட்ட ரெயில் சேவைகள் இயக்கப்பட்டுவிட்டன. எனவே ரெயில்வே நிர்வாகத்திடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பயணிகள் யாரும் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.