மும்பை:
மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் சரியாக நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறி அவர் கமிஷனர் பணியில் இருந்து மாற்றப்பட்டார்.
இந்தநிலையில் பரம்பீர் சிங், மாநில உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் மீது ஒரு முக்கிய குற்றச்சாட்டை கூறினார். உள்துறை மாதம் மாதம் ரூ.100 கோடி கமிஷன் பணம் வசூலித்து தரும்படி வற்புறுத்தியதாகவும், அதை ஏற்க மறுத்ததால் தன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
இந்த பிரச்சினை மராட்டியத்தில் பெரிய விஷயமாக வெடித்துள்ளது. உள்துறை மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜனதா வற்புறுத்தி வருகிறது.
அவர் ராஜினாமா செய்ய மாட்டார் என்று சரத்பவார் அறிவித்து இருக்கிறார். இந்தநிலையில் சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வரை போலீஸ் அதிகாரி பரம்பீர்சிங்கை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜனதா கூறி வந்தது. ஆனால் இப்போது திடீ ரென்று அவர் பா.ஜனதாவுக்கு நண்பன் ஆகிவிட்டார்.
சிவசேனா ஆட்சிக்கு எதிராக பா.ஜனதா பலரை ஏற்கனவே தூண்டிவிட்டது. இப்போது இந்த அதிகாரியை கையில் எடுத்துள்ளது. ஒரு அதிகாரியால் இந்த அரசு வீழ்ச்சி அடைந்துவிடக் கூடாது.
எங்கள் கூட்டணி அரசு பெரும்பான்மையோடு இருக்கிறது. இந்த ஆட்சியை சீர்குலைக்க நினைத்தால், தீப்பற்றும் சூழ்நிலை ஏற்படும்.
இது ஒரு எச்சரிக்கை மட்டு மல்ல. உண்மையைத்தான் சொல்கிறோம். ஏதாவது ஒரு காரணம் காட்டி இங்கு சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறி ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்துவிடலாம் என நினைக்கிறார்கள்.
மத்திய புலனாய்வு அமைப்புகளால் எங்கள் மாநிலத்தில் பல இடையூறுகள் செய்யப்படுகின்றன. இந்த விளையாட்டுகள் இங்கு வேண்டாம் என பா.ஜனதாவை எச்சரிக்கிறோம்.
இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது.