துபாய்:
துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேற்று ஹத்தா மலைப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்குள்ள இயற்கை பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். பின்னர் சைக்கிளில் குழுவினருடன் மலைப்பகுதியில் உள்ள வழித்தடங்களில் சைக்கிளை ஓட்டி சென்றார். பின்னர் அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
மாலை நேரத்தில் சூரியன் மறையும் நேரத்தில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். இந்த காட்சிகளை தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படமாக பதிவிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இன்று (அதாவது நேற்று) ஹத்தா பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். தாயகத்தில் சுற்றுலா என்பது எனது மக்களுக்கு ஆதரவானதாகும். நாட்டின் அடையாளங்களை வெளிப்படுத்துவது மற்றும் பிரபலப்படுத்துவது தாய்நாட்டை வெளிப்படுத்துவதாகும். சுற்றுலா எனது நாட்டில் உள்ளது. என் நாடு மிக அழகானது, இனிமையானது. என் நாடு மகிழ்ச்சியான நினைவுகள் மற்றும் உணர்வுகளுடையது. இறைவன் எனது நாட்டை பாதுகாக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.