விபத்து பலி 
செய்திகள்

நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி

நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பொறையாறு:

செம்பனார்கோவில் அருகே கீழையூர் உடையவர் இருப்பு தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது 50). இவர் நேற்று முன்தினம் இரவு கடைத்தெருவில் பொருட்கள் வாங்கி கொண்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். வரும் வழியில் நாய் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வீரமணி, நிலைதடுமாறி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை வீரமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.