நாகர்கோவில்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிந்து(வயது34). இவர் குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள கோட்டவிளாகம் அனு பநகரில் வசித்து வருகிறார். அங்கேயே நிதி நிறு வனமும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருமனை அருகே வெள்ளாங்கோடு பகுதியில் செயல்படும் தனியார் முந்திரி ஆலைக்கு சிந்து சென்றுள்ளார். அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம், தான் நிதி நிறுவனம் நடத்தி வருவதை தெரிவித்து அனைவருக்கும் கடன் தருவதாக கூறியுள்ளார்.
அதன்பேரில் சில தொழிலாளர்கள் சிந்துவிடம் கடன் கேட்டுள்ளனர். இதையடுத்து நேற்று இரவு சிந்து ஒரு காரில் 3 இரும்பு பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணத்துடன் முந்திரி ஆலைக்குச் சென்றுள்ளார். இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் தக்கலை தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையில் அருமனை போலீஸ் நிலைய போலீசார், முந்திரி ஆலைக்குச் சென்றனர். அங்கு காரில் பணப்பெட்டிகளுடன் வந்த சிந்துவை சுற்றிவளைத்து பிடித்தனர்.
காரில் இருந்த பெட்டிகளை போலீசார் சோதனை செய்த போது, அதில் 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. அவை அனைத்தும் கள்ள ரூபாய் நோட்டுகளாகும். மொத்தம் ரூ.53 லட்சம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிந்துவை அருமனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் விசாரணை நடத்தினார். அதில் சிந்து பலரிடம் கடன் தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.
நெய்யூர், மாலைக்கோடு, இடைக்கோடு, பளுகல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானவர்களிடம் கடன் வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்தது. மேலும் தன்னிடம் இருந்த கள்ள ரூபாய் நோட்டுகள் சினிமாவில் பயன்படுத்தக்கூடியவை என்றும், அதனை தனக்கு கேரளாவைச் சேர்ந்த பிரபல இயக்குனர் சந்தோஷ் வழங்கியதாகவும், போலீசாரிடம் சிந்து தெரிவித்தார்.
இதையடுத்து சிந்துவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கள்ள ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததால், தன்னிடம் கடன் வாங்கிய நபர்களுக்கு கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் சிந்துவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்த திரைப்பட இயக்குனர் சந்தோசிடம் விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ரூ.53 லட்சம் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் சிக்கி இருப்பதால், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தப்பட்டது.
அதில் கேரள மாநிலம் மற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் கள்ள ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரத்தில் சிந்துவின் கணவர் சிபு உள்ளிட்ட 6 பேர் மீது அருமனை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர்களை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் கேரளா மற்றும் குமரி மாவட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.