வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியின் 4-வது நாளான நேற்று வாணியம்பாடி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நெக்குந்தி சுங்கச்சாவடி பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை முன்னிலை வகித்தார்.
அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. பொதுமக்களுக்கும், பஸ் பயணிகளுக்கும் கபசுர குடிநீர், முக கவசம் வழங்கப்பட்டது. வாகனங்களில் வருவோருக்கும், போவோருக்கும் கொரோனா ெதாற்று பரவல் தடுப்பு பற்றி அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
முகாமில் தாசில்தார் மகாலட்சுமி மற்றும் வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர், காவல் துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பார்வையிடுவதற்காக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்றார்.
அப்போது திடீரென, வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு பொதுமக்களுக்கு அவர் நேரில் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் அங்கிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டு அறிந்தார்.
தொடர்ந்து தடுப்பு பணிகளை விரைந்து செய்யவும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் அங்கிருந்து அவர் கிருஷ்ணகிரி புறப்பட்டுச் சென்றார்.