குண்டடம்:
குண்டடம் அருகே உள்ள முல்லைநகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது40). இவர் குண்டடம் யூனியன் அலுவலகம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகள் அதுல்யாமேரி (14). இவர் குண்டடம் அருகே உள்ள சேடபாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கொரோனா 2-ம் அலையால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. வீட்டில் இருந்து படிக்கும்படி மகளை அந்தோணிராஜ் வற்புறுத்தி வந்தார். ஆனால் அதுல்யாமேரி வீட்டில் படிக்காமல் செல்போனில் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை படிக்கச்சொல்லி திட்டியுள்ளார்.
இதனால் மனவேதனையில் இருந்து வந்த அதுல்யாமேரி துணி துவைக்க செல்வதாக கூறி குளியலறைக்குள் சென்றவர் நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனையடுத்து அவரது தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் குளியலறை கதவை உடைத்து பார்த்தபோது அதுல்யாமேரி, வேட்டியால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் அதுல்யாமேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.