சசிகலா 
செய்திகள்

சசிகலா 7ந்தேதி சென்னை திரும்புகிறார்- வழிநெடுக வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு

சசிகலா 7-ந்தேதி பெங்களூருவில் இருந்து சென்னை புறப்படுகிறார். கர்நாடக-தமிழக எல்லையில் அத்திப்பள்ளி அருகே அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து கடந்த 27-ந்தேதி விடுதலையானார்.

கொரோனா தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் சிறை அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு சென்று சசிகலாவிடம் கையெழுத்து பெற்று விடுதலை செய்தனர்.

கொரோனாவில் இருந்து குணமடைந்த சசிகலா பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையிலிருந்து கடந்த 31-ந்தேதி ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். தற்போது பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹள்ளி அருகிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சொகுசு விடுதியில் சசிகலா உறவினர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஒரு வாரம் தனிமைக்கு பிறகு சசிகலா வருகிற 7-ந்தேதி சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.

7-ந்தேதி காலை 7.30 அளவில் சசிகலா பெங்களூருவில் இருந்து புறப்படுகிறார். கர்நாடக-தமிழக எல்லையில் அத்திப்பள்ளி அருகே சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பிரமாண்டமான மைதானம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. ஏராளமான வரவேற்பு பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டப்பட உள்ளன.

அன்று காலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அ.ம.மு.க. தொண்டர்கள் கார் மற்றும் வேன்கள், வாகனங்களில் அத்திப்பள்ளி பகுதிக்கு வருகிறார்கள். முக்கிய நிர்வாகிகள் 6-ந்தேதி மாலையே வரவும், ஓசூரில் முக்கிய விடுதிகளில் அவர்களை தங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓசூரில் உள்ள முக்கிய விடுதிகள் அனைத்தையும் அ.ம.மு.க.வினர் பதிவு செய்துள்ளனர். பெங்களூருவில் சசிகலா தங்கி இருக்கும் விடுதியில் இருந்து அத்திப்பள்ளிவரை கர்நாடக மாநில அ.ம.மு.க. சார்பில் டிஜிட்டல் பேனர்கள், வரவேற்பு வளைவுகள் அமைக்கப்படுகின்றன.

தமிழக எல்லைக்குள் வந்ததும் சசிகலாவுக்கு மேளதாளம், அதிர்வேட்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்படுகிறது. பூரண கும்ப மரியாதை அளிக்கவும், பெண்கள் திரண்டு ஆரத்தி எடுக்கவும், திறந்த வேனில் நின்றபடி சசிகலா பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதை தொடர்ந்து ஓசூர் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சசிகலா வழிபாடு நடத்துகிறார். பின்னர் சாலை மார்க்கமாகவே சசிகலா சென்னை திரும்புகிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 6 இடங்களில் வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அத்திப்பள்ளி எல்லை, ஓசூர், சூளகிரி, கிருஷ்ணகிரி டோல்கேட், கிருஷ்ணகிரி மேம்பாலம், பர்கூர் என்ஜினீயரிங் கல்லூரி அருகே ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதேபோல் சென்னை வரை வழிநெடுகிலும் சசிகலாவுக்கு பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்க தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அந்தந்த மாவட்ட அ.ம.மு.க.வினர் இந்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். வழியில் முக்கிய இடங்களில் சசிகலா நின்று கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார். காலையில் பெங்களூருவில் இருந்து புறப்படும் சசிகலா அன்று மாலை சென்னையை வந்தடைகிறார். சென்னை வந்ததும் அவர் நேராக ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஜெயலலிதா நினைவிடம் தற்போது அரசின் பராமரிப்பில் உள்ளது. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு சசிகலா தனது அதிரடி அரசியல் நடவடிக்கைகளை தொடங்குவார் என அ.ம.மு.க. வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏற்கனவே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனபோது காரில் அ.தி.மு.க. கொடியை கட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் சென்னை திரும்பியதும் அதிரடியான நடவடிக்கைகளில் சசிகலா ஈடுபடுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க என்று அறிவிக்கவும் சசிகலா தயாராகி வருவதாக அ.ம.மு.க.வினர் கூறுகிறார்கள்.

2017-ம் ஆண்டு மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடம் முன்பு ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து தியானம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய அதே நாளில் சசிகலா சென்னை திரும்புவதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.