குட்கா பொருட்கள் கடத்தியது தொடர்பாக கைதான இளங்கோவையும் பறிமுதல் செய்யப்பட்ட லாரியையும் படத்தில் காணலாம். 
செய்திகள்

பெங்களூரில் இருந்து விழுப்புரத்துக்கு லாரியில் கடத்திய ரூ.7 லட்சம் குட்கா பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வளத்தி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட நானோதயம் பகுதியில் ஏட்டுக்கள் குமரேசன்,ஷேக் அப்துல்லா,லட்சுமி நாரயணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுபடுத்தும்பொருட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து சிலர் மதுபாட்டில்கள் மற்றும் குட்கா பொருட்களை கடத்திவந்து விழுப்புரம் பகுதியில் விற்பனை செய்வதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வளத்தி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட நானோதயம் பகுதியில் ஏட்டுக்கள் குமரேசன்,ஷேக் அப்துல்லா,லட்சுமி நாரயணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.

ஆனால் லாரி டிரைவர் லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக சென்று விட்டார். உடனே போலீசார் அவரது வாகனங்களில் அந்த லாரியை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த லாரியை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அதில் 15 அட்டைபெட்டிகள் இருந்தது. அதை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் அரசால் தடை செய்யபட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.7லட்சம் ஆகும்.

இது குறித்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் பெங்களூர் பகுதியை சேர்ந்த இளங்கோ (வயது29) என்பதும், அவர் பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை விழுப்புரத்துக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோவை கைது செய்தனர். அவர் கடத்தி வந்த குட்கா,போதை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் பறிமுதல் செய்த குட்கா பொருட்களை பார்வையிட்டார். வாலிபரை கைது செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.

SCROLL FOR NEXT