கோப்புப்படம் 
செய்திகள்

நாகர்கோவிலில் நகை வியாபாரியிடம் ரூ.7 கோடி மோசடி

நகைக்கடை உரிமையாளர், அவரது மகன், மகள் உள்பட 3பேர் மீது மோசடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

நாகர்கோவில்:

நாகர்கோவில் மேற்கு ரத வீதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(வயது55). இவர் நகைக்கடைகளுக்கு கமி‌ஷன் அடிப்படையில் நகைகளை வாங்கி கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில்,

எனக்கும், நாகர்கோவிலில் நகைக்கடை நடத்தி வரும் ஒருவருக்கும் தொழில் ரீதியாக பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வருகிறது. இந்நிலையில் அவருக்கு ரூ.48 லட்சம் பணம் கடனாக கொடுத்தேன். என்னிடம் வாங்கிய நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை சேர்த்து எனக்கு அந்த நகைக்கடை உரிமையாளர் ரூ. 7 கோடி தரவேண்டும்.

ஆனால் அந்த நகைக்கடை உரிமையாளர், அவரது மகன் மற்றும் மகள் ஆகிய 3 பேரும் எனது பணத்தை திருப்பி தரவில்லை. பணத்தை திருப்பிக்கேட்ட எனக்கு நகைக்கடை உரிமையாளர், அவரது மகன் மற்றும் மகள் கொலைமிரட்டல் விடுத்தனர். அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

அவரது புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரதாணு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் ஆனந்த் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகைக்கடை உரிமையாளர், அவரது மகன், மகள் உள்பட 3பேர் மீதும் மோசடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

ஆரல்வாய்மொழி குமாரபுரத்தில் தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த திருவிதாங்கோடு கேரளபுரம் பகுதியை சேர்ந்தவர், நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய ரூ. 14 லட்சத்து 2 ஆயிரத்து 127 பணத்தை கட்டாமல் ஏமாற்றிவிட்டதாக அந்த நிறுவனத்தின் மேலாளர் சாஜூ, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளார்.

அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகானந்த் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.