வெள்ள பகுதிகளைப் பார்வையிட்ட நிதிஷ் குமார் 
செய்திகள்

பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் - நிதிஷ் குமார் அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மாலை மலர்

பாட்னா:

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அந்த மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். 

அந்த மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பீகாரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் நேற்று நேரில் பார்வையிட்டார்.

பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து முதல் மந்திரி நிதிஷ் குமார் படகில் சென்று பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமையை மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்