நிலோபர் கபில் 
செய்திகள்

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீது ரூ.6 கோடி மோசடி புகார்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீது ரூ.6 கோடி மோசடி புகார் மனு ஒன்றை சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில், அ.தி.மு.க. பிரமுகர் கொடுத்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஆம்பூர் பேட்டையைச் சேர்ந்தவர் பிரகாசம் (வயது 47). இவர் ஆன்லைன் மூலம் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு பரபரப்பு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் அ.தி.மு.க.வில் கடந்த 23 வருடங்களாக நிரந்தர உறுப்பினராக உள்ளேன். நான் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறேன். அமைச்சராக இருந்த போது, நிலோபர் கபிலுக்கு உதவியாளராகவும் பணியாற்றி உள்ளேன். நிலோபர் கபில் தேர்தலில் போட்டியிட்ட போது, அவர் தேர்தல் செலவுக்காக என்னிடம் பணம் கேட்டார். நான் ரூ.80 லட்சம் கொடுத்தேன். தெரிந்தவர்களிடமும், நண்பர்களிடமும் வாங்கி அந்த பணத்தை நான் கொடுத்தேன்.

இந்த நிலையில் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக நிலோபர் கபில் சொன்னதின் பேரில் சிலர் காசோலை வாயிலாக என்னிடம் பணம் கொடுத்தனர். அந்த பணம் நிலோபர் கபிலிடம் சேர்க்கப்பட்டது. ரூ.6 கோடி அளவுக்கு இது போல் பணம் வாங்கி கொடுக்கப்பட்டது.

சொன்னபடி வேலை வாங்கி கொடுக்க முடியவில்லை. பணம் கொடுத்தவர்கள் என்னிடம் பணத்தை திருப்பிக்கேட்டனர்.

நிலோபர் கபில் சொத்து ஒன்றை விற்று பணத்தை திருப்பி தந்து விடுவதாக சொன்னார். அது நடக்கவில்லை.

பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு எனது வீட்டிற்கு வந்து மிரட்டுகிறார்கள். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து நிலோபர்கபிலிடம் இருந்து பணத்தை திருப்பிப்பெற்றுத்தருமாறு வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு பற்றி நிலோபர் கபிலிடம் செல்போனில் பேசி அவரது கருத்தைக்கேட்க நிருபர்கள் முயற்சித்த போது, அவர் போனை எடுத்து பேசவில்லை.