புதுடெல்லி:
டெல்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கும் வழங்க வேண்டிய நிலுவை தொகையை விடுவிக்கக்கோரி பாஜகவினர் ஆம் ஆத்மி அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தினர். இதற்கு எதிர்வினையாக, புதுடெல்லி நகராட்சி கவுன்சிலின் நிதி 2500 கோடி ரூபாய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது. மேலும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்நிலையில், வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிப்பதற்காக டெல்லி சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வேளாண் சட்ட நகல்களை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிழித்து எறிந்து எதிர்ப்பை பதிவு செய்தார்.
இரண்டாம் நாளான இன்று ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள், பாஜகவை குறிவைத்து முழக்கங்கள் எழுப்பினர். பாஜக 2500 கோடி ரூபாய் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினர். இதுதொடர்பான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் மற்றும் பேனர்களை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.