இந்திய பணம் 
செய்திகள்

மூணாறில் ரூ.200 கள்ளநோட்டுகள் புழக்கம்

மூணாறில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதால் வியாபாரிகள், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மாலை மலர்

மூணாறு:

மூணாறில் நீண்டஇடைவெளிக்கு பிறகு ரூ.200 கள்ளநோட்டு புழக்கத்தில் வந்துள்ளது.

சுற்றுலா பகுதியான மூணாறு, மாட்டுப்பட்டி, எக்கோபாயிண்ட் ஆகிய பகுதிகளை குறிவைத்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவது அவ்வப்போது நடைபெறும். அதனை வங்கிகளில் மாற்றச்செல்லும்போதுதான் கள்ளநோட்டு என தெரியவரும். இதனால் கள்ளநோட்டுகளை பெற்று ஏமாறுவோர் பெரும்பாலும் வெளியில் கூறுவதில்லை. கொரோனாவால் முடங்கிய சுற்றுலா தொழில் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று பயணிகள் வர தொடங்கியுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ரூ.200 கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர். அசல் ரூபாய்நோட்டைவிட சற்று தடிமனாக தெரியும் வித்தியாசத்தை தவிர வேறு எதையும் கண்டுபிடிக்கமுடியாத அளவிற்கு இந்த நோட்டுகள் உள்ளன.

எனவே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இப்பகுதியில் வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.