பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மூடைகளுடன் கைதான 2 பேரை படத்தில் காணலாம். 
செய்திகள்

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி கடல் அட்டைகள் பறிமுதல்

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகளை கடலோர காவல்படை, வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாலை மலர்

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு கடல் பகுதியில் நேற்று இந்திய கடலோர காவல்படை முகாமை சேர்ந்த துணை கமாண்டன்ட் ரோஷன் பால்சிங், வனச்சரகர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் இந்திய கடலோர காவல் படையினரும், வனத்துறையினரும் இணைந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு கடல் பகுதியில் வந்து கொண்டிருந்த நாட்டு படகு ஒன்றை சோதனை செய்தனர்.

இதில் அந்த நாட்டுப்படகில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து 100 சாக்கு மூட்டைகளில் இருந்த 2,500 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். கடல் அட்டைகளை பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நாட்டுப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக வேதாளை தெற்கு தெருவைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 42) முகமது அன்சாரி (19) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 2,500 கிலோ கடல் அட்டையின் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்றும், இவை பதப்படுத்தப்பட்டு அதன் பின்னர் கடத்தல் ஏஜெண்டுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததும் தெரிய வந்துள்ளது.