திருமக்கோட்டை அருகே தீயில் எரிந்து நாசமான கூரை வீடு. 
செய்திகள்

திருமக்கோட்டை அருகே கூரை வீட்டில் தீ- 3 ஆடுகள் பலி

திருமக்கோட்டை அருகே கூரை வீடு தீயில் எரிந்து சாம்பலானது. இதில் 3 ஆடுகளும் பலியாயின.

மாலை மலர்

திருமக்கோட்டை:

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே கன்னியாகுறிச்சி கிராமம் ஆற்றங்கரை தெருவில் வசிப்பவர் தங்கராசு. இவர் விவசாய கூலி தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் வீட்டில் சமையல் செய்து விட்டு வெளியே சென்றிருந்தார். இந்த நிலையில் அடுப்பில் இருந்து தீப்பொறி கிளம்பி வீட்டு கூரையில் தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பரவி வீடு முழுவதும் பற்றி எரிந்தது.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த திருமக்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் தீக்கிரையாகின. வீடு அருகே இருந்த கீற்று கொட்டகையும் தீயில் எரிந்து அங்கு கட்டப்பட்டிருந்த 3 ஆடுகள் பரிதாபமாக பலியாகின. இந்த தீ விபத்தில் மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்பில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.