மண்சாலை சேறும், சகதியுமாக காட்சியளிப்பதை காணலாம். 
செய்திகள்

அரவக்குறிச்சி அருகே சேறும், சகதியுமாக மாறிய மண் சாலை- சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் மண் சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சி:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் அநேக இடங்களில் தார் சாலையும் மற்றும் சிமெண்டு சாலையும் போடப்பட்டுள்ளது. இதே பேரூராட்சி பகுதியில் தான் கூலப்பாநகர் உள்ளது. இப்பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள தெருக்களில் அனைத்தும் மண்சாலையாகவே உள்ளது.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் கூலப்பாநகரில் உள்ள தெருக்கள் சேறும், சகதியுமாக காட்சியளித்து வருகிறது. மேலும் இப்பகுதியில் சாக்கடை வசதியும் இல்லாததால், வீடுகளில் உள்ள கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது.

இதனால் அப்பகுதி தெருக்களில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சில நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மண்சாலையாக உள்ளதை தார்சாலையாகவோ அல்லது சிமெண்டு சாலையாகவோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT