சாலியமங்கலம்:
தஞ்சையை அடுத்த ராராமுத்திரக்கோட்டை அருகே மேல கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது61). கடந்த 22-ந்தேதி இவரது வீடு மூடி கிடந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்த போது அங்கு ஜெயலட்சுமி ரத்த காயத்துடன் பிணமாக கிடந்துள்ளார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசில் ஜெயலட்சுமியின் கொழுந்தனார் செல்வம் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று போலீசார் அதே தெருவை சேர்ந்த உணவக உரிமையாளர் மணி (50) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மணிக்கு சொந்தமான ஆடு ஜெயலட்சுமி வீட்டு பகுதியில் மேய்ந்ததை கண்டித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மணி ஜெயலட்சுமியை கட்டையால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததும், பின்னர் ஜெயலட்சுமியின் உடலை மணி அவரது வீட்டிற்குள் வைத்து பூட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.