திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், தலைவர் வீரமணி, மகளிர் அணி தலைவி ஜி.மகேஸ்வரி, எம்.சிவகுமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
அதில் பள்ளிக் கல்வித்துறையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டோம். ரூ.5 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் 2012 முதல் பணியமர்த்தப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி, கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி குறித்து இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறோம். தற்போது ரூ.7,700 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் பகுதிநேர தொழிற் கல்வி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள், இரவு நேரக் காவலர்கள், உரக வளர்ச்சித் துறையில் துப்புரவு பணியாளர்கள், காவல்துறையில் சிறப்பு இளைஞர் படையினர், வருவாய் துறையில் பகுதி நேர பணியாளர்கள் ஆகியோர் நிமுழுநேர பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று பகுதிநேர ஆசிரியர்ளையும், அவர்களின் குடும்ப நலன் மற்றும் வாழ்வாதாரம் காத்திட முழுநேர வேலையுடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அரசுக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.