கலவை:
கலவையில் வாழைப்பந்தல் சாலை மற்றும் திமிரி சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் பலர் வீடு கட்டி வசித்து வந்தனர். 86 கடைகளும் இருந்தன. நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் என்பதால் அதில் கட்டப்பட்டிருந்த வீடு மற்றும் கடைகளை அகற்றிக்கொள்ளுமாறு அதிகாரிகள் இரண்டு முறை நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும் வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலை துறையினர் நேரில் சென்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளர் சக்தி சாய்நாதன், கலவை தாசில்தார் ரவி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி ஆகியோர் முன்னிலையில் கடைகள் மற்றும் வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டன.
இதனால் அதிர்ச்சியடைந்த சிலர் மயக்கம்போட்டு விழுந்தனர். அங்கிருந்தவர்கள் தீபாவளிக்கு பிறகு அகற்றிக்கொள்ளலாம் என்று கூறினர். வீடு இழந்தவர்களுக்கு மாற்று இடமாக வீட்டுமனை வழங்குவதாக கலவை தாசில்தார் ரவி கூறியுள்ளார். உதவி செயற்பொறியாளர் ஞானப்பிரகாசம், இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, ராஜேந்திரன், தமிழ்ச்செல்வி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அலுவலர் திருமால், ஸ்ரீதர் மற்றும் பலர் ஆக்கிரமிப்பு ஆகற்றும் பணியின்போது உடனிருந்தனர்.