மேலகிருஷ்ணன்புதூர்:
நேற்று முன்தினம் மாலை மணிகண்டன் தனது நண்பர்களான மீனாட்சிபுரத்தை சேர்ந்த சுதர்சிங்(17), வடிவீஸ்வரத்தை சேர்ந்த நடராஜன் (17), பீச்ரோடு பகுதியை சேர்ந்த விஷ்ணுகுமார் (18), சுதன்(17), செட்டிகுளத்தை சேர்ந்த சுரேஷ்குமார் ஆகியோருடன் மணக்குடிக்கு சென்றார். அங்கு தூண்டில் வளைவு பகுதியில் நின்று கடல் அலையை ரசித்து கொண்டிருந்தனர்.
பின்னர், அவர்கள் அனைவரும் கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலை 6 பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதில் 5 பேர் நீந்தி கரைக்கு வந்தனர். மணிகண்டன் மட்டும் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
இதுபற்றி சுசீந்திரம் போலீசாருக்கும், குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்தபகுதி மீனவர்கள் உதவியுடன் மணிகண்டனை தேடினர். இரவானதும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வள்ளங்கள் மூலம் தேடும் பணி நடந்தது. நீண்ட நேரம் தேடியும் மணிகண்டனை கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்தபகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது, மணிகண்டனின் பிணம் கடலில் மிதப்பதை கண்டனர். இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மீனவர்களின் உதவியுடன் மணிகண்டனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதற்கிடையே, தகவல் அறிந்த மணிகண்டனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கடற்கரையில் திரண்டனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.