மழை 
செய்திகள்

ராமேசுவரத்தில் விடிய-விடிய கனமழை: 4-வது நாளாக மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதி

ராமேசுவரத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெளியே செல்ல முடியாமல் அவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

மாலை மலர்

ராமேசுவரம்:

இலங்கையையொட்டி உள்ள வங்க கடலில் உருவான புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. 4-வது நாளாக நேற்றும் ராமே சுவரத்தில் விடிய-விடிய கனமழை பெய்தது காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் மழை பெய்யத் தொடங்கியது.

இரவு கனமழையாக நீடித்து, அதிகாலையில் ஓய்ந்தது. மழை காரணமாக ராமேசுவரத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

ராமேசுவரம் பஸ் நிலையம், ராமதீர்த்த கரை, காந்தி நகர், புதுரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே நேற்று பெய்த மழையில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று காலை நகராட்சி ஊழியர்கள் அதனை அப்புறப்படுத்தினர்.

கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ராமேசுவரத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெளியே செல்ல முடியாமல் அவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

கனமழை காரணமாக ராமேசுவரம் வடக்குத் தெரு, நேதாஜி நகர், கரையூர், தெற்கு கரையூர், முத்துராமலிங்க தேவர் நகர், பாம்பன் தோப்புக்காடு ஆகிய பகுதிகளில் 9 வீடுகள் இடிந்து சேதமாயின. இதேபோல் பலத்த சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு காரணமாக ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமைட்ந்தன.

மழையில் சேதமடைந்த வீடுகள், படகுகளை அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கெடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ராமேசுவரத்தில் 3 நாட்களுக்கு முன்பு தற்காலிகமாக மின் தடை செய்யப்பட்டது. அப்போது வீசிய சூறாவளி காற்றால் மண்டபத்தில் கடல் வழியாக ராமேசுவரம் செல்லும் மின் பாதையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.இதன் காரணமாக மின் விநியோகம் செய்ய முடிய வில்லை.

மின் வாரிய ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கோளாறை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இன்று 4-வது நாளும் ராமேசுவரத்தில் மின் விநியோகம் செய்யமுடியவில்லை. மின் தடை காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமேசுவரம் மின் வாரிய செயற் பொறியாளர் மங்களநாதன் கூறுகையில், மின் பாதையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரியசெய்ய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் சரி செய்யப்பட்டு மின் விநியோகம் செய்யப்படும் என்றார்.

இதனிடையே ராமேசுவரத்துக்கு விரைந்து மின் விநியோகம் வழங்க கோரி இன்று ராமேசுவரம் மின் வாரிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.