பதஞ்சலி நிறுவன தலைவராக செயல்பட்டு வருபவர் ராம்தேவ், இவரை யோகா குரு எனவும் அழைக்கின்றனர். பதஞ்சலி நிறுவனம் மூலம் ஆயுர்வேத பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ராம்தேவ் கூறுகிறார். இவர் கொரோனா வைரசை தடுக்கும் என்று எவ்வித உத்தரவாதமும் அளிக்கப்படாத கொரோனாநில் என்ற மருந்து பொருளை விற்பனை செய்து வருகிறார்.
சமீபத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராம்தேவ் பேசுகையில், அலோபதி சிகிச்சை முறையால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். அலோபதி முட்டாள்தனமான மற்றும் தோல்வியடைந்த சிகிச்சை முறை என தெரிவித்தார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராம்தேவின் கருத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. அவர்மீது பெருந்தொற்று நோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்த இந்திய மருத்துவ சங்கம் அவருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்ஷ்வர்தன், அலோபதி தொடர்பாக பேசிய கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும் என ராம்தேவுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என தான் கூறிய கருத்துக்காக டாக்டர்களிடம் மன்னிப்பு கேட்டார் ராம்தேவ்.
இந்நிலையில், தான் விரைவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளப் போகிறேன் என ராம்தேவ் தெரிவித்துள்ளார்.