ரஜினிகாந்த் 
செய்திகள்

26-ந்தேதி 40-வது திருமணநாள்: ரஜினி முக்கிய முடிவுகளை அறிவிக்க வாய்ப்பு?

வருகிற 26-ந் தேதி திருமண நாள் அன்று ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாலை மலர்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டுவிட்டு ஓய்வில் இருந்து வருகிறார்.

கடந்த டிசம்பர் மாதம் 29-ந்தேதி இந்த அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், கொரோனா பரவிவரும் நிலையில் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதன் பின்னர் ரசிகர்கள் போராட்டம் நடத்திய போதும், அறிக்கை வெளியிட்டு ‘மனவேதனை’ அடைவதாக கூறி இருந்தார். எனது நிலையை தெளிவுபடுத்தி விட்டேன் என்றும் ரசிகர்கள் அரசியலுக்கு மீண்டும் அழைத்து சங்கடப்படுத்த வேண்டாம் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பரஸ்பரம் உடல்நலம் விசாரித்துக் கொண்டனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த கமல், ரஜினியிடம் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்றும் தெளிவுபடுத்தி இருந்தார். இதன் மூலம் ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டு இருந்தது.

வருகிற 26-ந் தேதி ரஜினிகாந்த்- லதா தம்பதியரின் 40-வது திருமண நாளாகும்.

இருப்பினும் கடைசி நேரத்தில் மாறிவிடமாட்டாரா? என்று இன்னும் சில ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள்.

இந்தநிலையில் தான் வருகிற 26-ந் தேதி திருமண நாள் அன்று ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.