மழை 
செய்திகள்

ராமநாதபுரம் பகுதியில் இடி, மின்னலுடன் மழை- விவசாயிகள் மகிழ்ச்சி

ராமநாதபுரம் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாலை மலர்

ராமநாதபுரம்:

ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, திருப்புல்லாணி, மண்டபம் பகுதிகளில் சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பிற்பகல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் ஓடிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியுடன் காணப்பட்டது.

கோடை உழவு செய்த நிலையில் மீண்டும் மழை வராதா என்ற ஏக்கத்தில் இருந்த விவசாயிகளுக்கு இந்த மழை மகிழ்ச்சியை தந்தது.

மழையின் காரணமாக வழக்கம்போல் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. பனைக்குளத்தில் மின்சாரம் ‘கண்ணாமூச்சி’ விளையாடியது. இங்கு 5 நிமிடத்திற்கு ஒரு முறை மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் எரிச்சல் அடைந்தனர்.

பல வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. இன்று காலை பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.