மரணம் 
செய்திகள்

கோவை மத்திய சிறை கைதி திடீர் மரணம்

கோவை மத்திய சிறையில் நெஞ்சு வலி காரணமாக மயங்கி விழுந்த கைதி திடீரென உயிரிழந்தது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

கோவை:

கோவை வெள்ளியங்காடு அருகே உள்ள கோரைபதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயத 35). இவர் பெரியநாயக்கன் பாளையத்துக்குட்பட வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்திய வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த தங்கராஜூக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார். இதனை பார்த்த சக கைதிகள் இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து சென்று தங்கராஜை மீட்டு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தங்கராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.