வளர்மதி 
செய்திகள்

திருச்செந்தூர் அருகே பிரசவத்தில் பெண் பலி- உறவினர்கள் சாலை மறியல்

திருச்செந்தூர் அருகே பிரசவத்தில் பெண் உயிரிழந்தார். இதையடுத்து டாக்டர்களைக் கண்டித்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி முருகேசபுரத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவருடைய மனைவி வளர்மதி (வயது 32). இவர்களுக்கு பவானிஷா (6) என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த வளர்மதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், நேற்று முன்தினம் பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

அப்போது வளர்மதிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதால், உடனே அவரை திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், வளர்மதியின் கர்ப்பபையை அகற்றியதாக கூறப்படுகிறது.

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே வளர்மதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், பொதுமக்கள், வளர்மதிக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், நேற்று காலையில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வளர்மதியின் இறப்புக்கு காரணமான சம்பந்தப்பட்ட டாக்டர்கள், நர்சுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வளர்மதியின் குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.