கைது 
செய்திகள்

தபால் ஓட்டை சமூகவலைதளத்தில் பகிர்ந்த அரசு ஆசிரியை-2 பேர் கைது

தென்காசியில் பதிவு செய்யப்பட்ட தபால் ஓட்டு வாட்ஸ்-அப்பில் வெளியானது தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மாலை மலர்

தென்காசி கல்வி மாவட்டம் சுரண்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள். இவர் வாக்குச்சாவடி தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது தபால் வாக்கை குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு பதிவு செய்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பரப்பியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் கலெக்டரிடம் புகார் அளித்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியையை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பள்ளியின் தாளாளருக்கு தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் தென்காசி மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 26-ந்தேதி சங்கரன்கோவில் கோமதி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த 2-ம் கட்ட பயிற்சி வகுப்பில் தபால் வாக்கிற்கு விண்ணப்பித்தேன்.

ஆனால் இதுவரை எனக்கு வாக்குச்சீட்டு தபாலில் வரவில்லை. இந்நிலையில் பேஸ்புக்கில் எனது தபால் ஓட்டு வெளிவந்துள்ளது. எனக்கென எவ்வித முகநூல் கணக்கும் இல்லாதபோது மர்மநபர்கள் யாரோ எனது தபால் ஓட்டை பெற்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.  எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாளின் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து  உதவி தேர்தல் நடத்தும் தாசில்தார் வெங்கடேஷ் அளித்த புகாரில்,தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் விசாரணையை தொடங்கினார்.

முதலில் பேஸ்புக்கில் தபால் வாக்கு படத்தை பதிவிட்டவர் யார்? என்று விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் சுரண்டை பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியை சேர்ந்த கணேசபாண்டி என்பவர் தபால் வாக்கு சீட்டை செந்தில்குமாருக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பியது தெரிய வந்தது. தொடர்ந்து கணேச பாண்டியை பிடித்து போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

சுரண்டையை அடுத்த வீ.கே.புதூர் அருகே உள்ள வெள்ளக்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் கிருஷ்ணவேணி.

இவரது கணவர் கணேசபாண்டி. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தென்காசி தொகுதி அ.ம.மு-.க. நிர்வாகியாக இருந்து வருகிறார். இவர் தனது மனைவி கிருஷ்ணவேணியை அ.ம.மு.க. வேட்பாளருக்கு தபால் ஓட்டு போட கூறி உள்ளார். அதன்படி ஆசிரியை கிருஷ்ணவேணி தபால் ஓட்டு போட்ட பின்பு அதனை செல்போன் மூலம் போட்டோ எடுத்து உள்ளார்.

உடனே கணேசபாண்டி அந்த போட்டோவை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அதில் ஒருவரான செந்தில்குமார் அந்த போட்டோவை பேஸ்புக்கில் பகிர்ந்தபோதுதான் இந்த பிரச்சனை எழுந்தது தெரியவந்தது.

இதையடுத்து கணேசபாண்டி, ஆசிரியை கிருஷ்ணவேணி, செந்தில்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.