வீரபாண்டி கிராமத்தில் தி.மு.க. வேட்பாளர் பொன்முடி எம்.எல்.ஏ. வாக்கு சேகரித்த போது எடுத்த படம். 
செய்திகள்

திருக்கோவிலூர் தொகுதி வளர்ச்சி பெற பாடுபடுவேன்- பொன்முடி எம்எல்ஏ பேச்சு

திருக்கோவிலூர் தொகுதி வளர்ச்சி பெற பாடுபடுவேன் என்று முகையூர் ஒன்றியத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. வேட்பாளர் பொன்முடி எம்.எல்.ஏ. பேசினார்.

மாலை மலர்

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ. முகையூர் ஒன்றியம் தேவனூர், வெள்ளம்புத்தூர், நாயனூர், அரசங்குப்பம், வசந்தகிருஷ்ணாபுரம், ஆதிச்சனூர், வீரபாண்டி, புலிக்கல், தண்டரை, ஒட்டம்பட்டு, அருணாபுரம், கல்லந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று தனக்கு ஆதரவு திரட்டி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது... சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகத்தான வெற்றி பெற்று முதல்-அமைச்சராக பதவியேற்க உளளார். அவர் பதவியேற்றதும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியை வளர்ச்சி பெறவைக்க பாடுபடுவேன். கடந்த முறை நான் வெற்றிபெற்று எதிர்க்கட்சி உறுப்பினராகிவிட்டேன். இந்த முறை உங்களின் முழு ஆதரவுடன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சொன்ன வாக்குறுதியை கண்டிப்பாக செய்துமுடிப்பேன்.

அ.தி.மு.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை முற்றிலும் மக்களுக்கு ஆசையை தூண்டிவிடும் மாயாஜால வித்தை ஆகும். அதே சமயம் தி.மு.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்களுக்கு என்ன? என்ன அத்தியாவசியம் என்பதை ஆராயந்து ஒரு தொலைநோக்கு பார்வையோடு தயாரிக்கப்பட்டது ஆகும். எனவே அந்த அறிக்கையின்படி அனைத்து திட்டங்களும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற உடன் செயல்படுத்தப்போகின்றார். அதனை நீங்கள் அனுபவிக்கத்தான் போகின்றீர்கள். எனவே இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் என்னை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.என்.முருகன், ஒன்றிய செயலாளர்கள் அ.சா.ஏ.பிரபு, வக்கீல் எம்.தங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஐயப்பன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பொன்.முருகன், மணிவண்ணன், வெங்கட், கணிதராஜ், ஊராட்சி அமைப்பாளர் நரசிம்மன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி வேல்முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர், வீரபாண்டி கிளை செயலாளர் ஏழுமலை, சக்திசிவம், அருணாமுருகன், வக்கீல் கருணாகரன், ஆதிச்சனூர் ரட்சகன், நகர அமைப்பாளர் தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் தமிழ்நிலவன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.